Saturday, 30 July 2011

இதயங்களின் சப்தங்கள்
நிசப்தமான இரவு நேரம்...

இரவு?!

பூமிராணிக்கு சூரியசேவகன்
போர்த்தும் போர்வை போலும்!

மரக்கிளையில்
அவ்வபோது மெட்டவிழ்த்தன,
சில பூங்குயில்கள்!

பூங்கிளையில்
அவ்வபோது மொட்டவிழ்த்தன,
சில பூக்கூட்டங்கள்!

சத்தமிட்ட சப்தங்கள் யாவும்
தடைசெய்யபட்டன!!

கதவுகளும், சில ஜன்னல்களும்
சாத்தப்பட்டதில்,

சத்தமிட்ட சப்தங்கள் யாவும்
தடைசெய்யப்பட்டன!!

பளிங்கு நிறத்திலொரு
வெண்மெத்தை!!! - அதே
நிறத்தில் அதின்மேலொரு
பெண் தத்தை!!

அவனும்! அவளும்!

கொஞ்சம் இடைவெளியில்
அமர்ந்திருந்தனர்..
கொஞ்சும் கடைவிழியால்
பேசிக்கொண்டிருந்தனர்..

பாஷைகளின்றி!
ஓசைகளின்றி!

புரிந்துகொள்ளப்பட்டன
ஆசைகள் யாவும்!

இருவரும் நெருங்கியதில்
இடைவெளி வெளியேறியது!
காற்றும் கூட புகமுடியாதபடி
தடை வேலி உருவானது!

கட்டிக்கொண்ட உடல்களால்,
ஒட்டிக்கொண்டன இதயங்கள்!

அருகருகே சந்தித்ததில்
இனம்புரியாத மகிழ்ச்சியில்,
படபடவென்று அடித்தன!
பட்டாம்பூச்சி இதயங்கள்!

அறையின் திசையெங்கும்
ஒலித்தது இசையொலி!

மெல்ல கண்மூடினாள் இளமங்கை!
இதயங்களின் சப்தங்களை ரசித்தபடி!


ஷீ-நிசி

Friday, 29 July 2011

உன்னில் விழுந்தவன்!கர்ப்பத்தின் அறையில்
களிப்போடு தாங்கியவளே!
மாதங்கள் பத்தும்
வலியோடு தூங்கியவளே!

பாரம் இறக்கிவைத்து
அழுகுரல் வந்த....
தூரம் செவிவைத்து
உன் தலைசாய்த்தாய்!

கண் திறக்காமல்,
கதறிக்கொண்டிருந்தேன்!
உன் குருதி பாலானது!
எனக்கது முதல் உணவானது!

எல்லாம் புதிதாய் அணிவித்து,
பள்ளிக்கனுப்பினாய்! -நீ
அணிந்ததை எல்லாம் விற்று,
கல்லூரிக்கும் அனுப்பினாய்!

கண்ணீர் விட்டாய்!
பலமுறை மணவறை
மணாளானாலும்
சிலமுறை கருவறை
மகனாலும்!

ஆனால், என்றுமே
இன்பம் மட்டுமே அளித்தாய்!
உன்னில் விதைத்தவனுக்கும்
உன்னில் விழுந்த எனக்கும்!

அம்மா!

ஒவ்வொரு உயிரும்.....
மண்ணில் மரிக்கும்வரை,
தன்னில் நினைக்கவேண்டும்!

ஷீ-நிசி

Tuesday, 26 July 2011

கருவறை உறவிது
சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
பூத்த உறவல்ல இது!
இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
பூத்த உறவிது!

நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்தவள் நீ!
நான் தமக்கை என்ற பதவியை
எனக்குத் தந்தவள் நீ!

காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!

இப்பொழுதெல்லாம்
மோதல்களில் நீயே
வெற்றிக்கொள்கிறாய்..

நம் ஆயுதங்கள்,
அதிகபட்சம் தலையணைகள்!

காலங்கள்
வினாடிகளை விடவும்
வேகமாய் ஓடுகின்றன!

பால்ய காலங்களை கடந்து -இன்று
பருவ காலத்திலே நாம்!

ஒரே அறையில்
ஒன்றாக பயில்கிறோம் -பின்
நன்றாக துயில்கிறோம்!
எப்போதும் மகிழ்கிறோம்!!

இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!


ஷீ-நிசி

Monday, 18 July 2011

இரும்பிலே ஒரு சேலை - முதல் பரிசு பெற்ற கவிதை


செய்தி : உத்தரபிரதேசம் :மேலும் 3 சிறுமிகள் கற்பழிப்பு

நேற்றிரவு ஒரு கனவு

வெள்ளுடையில்,
அழுதுகொண்டிருந்தாள்;
ஒரு பெண்..

ஏன் அழுகிறாய்?!
என்ன வேண்டும் என்றேன்?

இரும்பிலே,
எனக்கொரு சேலை வேண்டும்!
கிடைக்குமா என்று கேட்டாள்....

நீ யாரென்று கேட்டேன்..

நானா?!! நான்.. நான்..
நான்தான்…..

“பாரதமாதா"

ஷீ-நிசி

ஈகரை தளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது இக்கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
http://contest4.eegarai.com/p/blog-page_7751.html

Tuesday, 12 July 2011

கலைந்து போன வானவில்

வானவில் எப்பொழுதும்
வளைந்துதானே இருக்கும்!

இங்கென்ன?!
கலைந்து போயிருக்கிறது!!

அவள் முகமும்
தளர்ந்து போயிருக்கிறது!!!

துள்ளியோட விரும்பும்
மானினமே! -உன்னை
துவள வைக்கிறதோ?!
இந்த ஆணினமே!!

ஷீ-நிசி