Wednesday, 28 December 2011

புத்தாண்டு!

இதுவும் ஒரு சாதாரண
விடியல்தானே!

இதற்கு மட்டும் என்ன
இத்தனை வரவேற்பு
கொடுக்கிறாய்?!

வருடத்திலே தொடங்கும்
முதல் விடியலாம்;
வாழ்விலே தொடரும்
தவறுகள் மடியலாம் -என்று
எண்ணுகிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் குழந்தைகளின்
பொத்தலாடைகளினால்;
தெருக் குழந்தைகள்
புத்தாடை அணிவார்களே!

ஒருவேளை அதற்காகவா?!

முதியோர் இல்லங்களில் வாழும்
மூத்தோர் உள்ளமும், வயிறும்
உன்னால் நிறைந்திடுமே
அந்நாளிலே!

ஒருவேளை அதற்காகவா?!

உன் வீட்டிலே
தயாரிக்கப்படும் இனிப்புகள்;
உன் பகைவர்களின் வீட்டிலே
ருசிக்கப்படப்போகிறதே!

ஒருவேளை அதற்காகவா?!

ஏதோவொரு
சூழ்நிலையில் உண்டான
கோபதாபங்களை
மறந்து, மன்னித்து
யாவருடனும் நட்புறவு
கொள்ளத் துடிக்கிறாயே!

ஒருவேளை அதற்காகவா?!

இல்லாத நிலையிலும்
இருப்பதே போதுமென்று
கடன் வாங்காமல்
இன்முகத்துடன்
இந்நாளை வரவேற்கிறாயே

ஒருவேளை அதற்காகவா?!

அப்படியென்றால்,

நண்பா,
கண்டிப்பாக உனக்கு மட்டும்
இது சாதாரண விடியலில்லை!
இதற்கு நீ
எத்தனை வரவேற்பு
கொடுத்தாலும் தகும்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
ஷீ-நிசி

Monday, 3 October 2011

உதிராத நினைவுகள்
எத்தனை ரம்மியமான
நினைவுகள் அவை...
நீ என்னை காதலிக்கிறேன்
என்று சொல்லிய தருணம்!

கல்லூரி மரநிழல்!

கீழே இறைந்து கிடந்தன
மரத்தின் வியர்வைகள்!
இலைகளும், பூக்களுமாய்!

சிமெண்ட் பெஞ்சில்
நான் மட்டும்
அமர்ந்திருந்தேன்!

என் நெஞ்சில்
நீ மட்டும்
அமர்ந்திருந்தாய்!

வெட்கம்
இருவருக்குமிடையில்,
வெட்கமில்லாமல்
இருந்ததால்,

காதல் அறிவிப்பு
வாசிக்கபடாமலே இருந்தது!

தூரத்தில் நடந்து
வந்துக்கொண்டிருந்தாய்!

நடை அசைவைக் கண்டே,
மூளை மனதிற்கு
செய்தி அனுப்பியது!

விழிகளிரண்டும்
வழி பார்த்தே குதூகலித்தன!

கைகள் கலையாத
கூந்தலை சரிசெய்தன!

இதழ்கள் உன் பெயரை
செல்லமாய் உச்சரித்தன!

அருகே வந்துவிட்டாய்,

தலை கவிழ்த்திருந்தேன்!
புத்தகம் பார்த்தபடி,

கையில் ஒற்றை பூவோடு
என் அருகில் வந்தாய்!

ரோஸி என்றாய்!

நிமிர்ந்தவளின் இதழுக்கு
நேராய் இருந்தன,
ரோஜாவின் இதழ்கள்!

ஐ லவ் யூ..... என்றாய்!

முத்தமழை கொடுத்து
கட்டிக்கொள்ள துடித்தன
என் கரங்கள்!

நெஞ்சம் புகுந்த உன்னோடு
கொஞ்சம் விளையாட
விரும்பினேன்!

முடியாது என்றேன்!

உன் இருவிழியில்
கருமேகங்கள் கூடி,
முதல் துளிகளுக்கு
தயாரானது!

மனம் வலித்தது!

முடியாது!
இப்படி சொன்னால்
முடியாது!

கட்டியணைத்து முத்தமிட்டு
சொல் உன் காதலை
என்றேன்!

அரை நொடியில்
ஆறங்குலம் வளர்ந்தேன்!
உன் கரங்களால்!

பூமிக்கும் பாதத்திற்கும்
இடைவெளி ஏற்படுத்தினாய்...

காற்றில் காதலை
சத்தமாய் அறிவித்தாய்
என்னை ஏந்தியபடி....

டெலிபோன் அலறியது!

மெல்ல விலக்கினேன்
என் பார்வையை,
சுவரில் மாட்டியிருந்த
அவன் புகைப்படத்திலிருந்து..

இரண்டு மெழுகுவர்த்திகளும்
கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தன!

Tuesday, 27 September 2011

கவிதையான கணங்கள்ஒரே நிமிடத்தில்
உலகின் எல்லா
சந்தோஷங்களையும்
தந்திட முடியுமா??

முடியும்!!!!

ஒரே நிமிடத்தில்
உலகின் எல்லா
சந்தோஷங்களையும்
பெற்றிட முடியுமா??

முடியும்!!!

முதல் முறையாய்
அவள், அவனுடன்
அலைபேசியில்!!!

எட்டாமலே இருக்கும்
வட்ட நிலா -அன்று
சற்றே நட்சத்திரங்களின்
வனமிரங்கி வந்தது!

அவன் நிலைக்கண்டு -தன்
மனமிரங்கி வந்தது

நிலவின் ஒளியை
நீங்கள் அறிவீர்கள்!
நிலவின் ஒலியை
அவன் அறிவான்!

செவிவழியே சென்று!
மூளையை முட்டி,
இதயத்தில் இறங்கியது....

அவள் இதழ்வழி பிறந்த
ஒரு கோடி பட்டாம்பூச்சிகள்...

ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அந்த கணப்பொழுதில்!!!

அவன் இதயத்தை
திறந்து பாருங்கள்!!

நரம்புகளுக்கு பதிலாய்
இதயத்தில் எங்கெங்கும்
பூக்களின் மெல்லிய காம்புகள்!

வானவில்லை உருக்கி,
ஏழுவண்ணங்களில் பாய்ந்தன!
இரத்தம் முழுதும் புதிதாக!!
சிவப்பு நிறத்திற்கு பதிலாக...

குருதியில் ஓடுகின்ற
அந்த ஏழுவண்ணணுக்களை
சோதித்துப்பாருங்கள்...

உறுதியாய் சொல்கிறேன்!
ஒவ்வொன்றிலும்
அவள் பெயர்
பொறித்திருக்கும்!

மீண்டும்....
சந்திப்போமென்று சொல்லி
மீண்டும்....

எட்டாத உயரத்திற்கு
சிட்டாக சென்றது -அந்த
வட்ட நிலா!

நீலவானில் விழிகளை
நிலைநிறுத்தி.. நிலவின்
நினைவுகளை மீட்டெடுத்தான்...

அந்த ஒற்றைநிமிட
கிளியின் குரல் மட்டும்
இதயத்தின் ஓரத்தில் மீண்டும்
ஒலிக்க ஆரம்பித்தது!


ஷீ-நிசி

Tuesday, 20 September 2011

இவர்கள் தவழும் குழந்தைகள்


பறந்து செல்லும்
பறவைக் கூட்டங்களோடு
தவழ்ந்து செல்லும்
மேக கூட்டங்கள்!

காம்பில்லாத ரோஜாக்கள் -இந்த
காலில்லாத ரோஜாக்கள்!

வலிகளை சுமக்கமுடியுமென
இறைவன் தேர்ந்தெடுத்த
வான் குழந்தைகள்!

காலணிகளை வைக்கவும்
தயங்கும் இடங்களில்,
கரங்களை வைத்தபடி
இயங்கும் இதயங்கள்!

சமூகத்தின்
அவநம்பிக்கைகளை
களைய வைத்து,
தன்னம்பிக்கைகளை
விளைய வைத்தவர்கள்!

இழந்திட்ட அங்கங்களின்
உடல் வலிமையை
இருமடங்காய்
இதயத்தில் ஏற்றியவர்கள்!

இவர்களுக்கு தேவை,

வாய்ப்புகள் என்னும்
வழிகள் தான்!
அனுதாபம் என்னும்
வலிகளல்ல....


ஷீ-நிசி

Tuesday, 13 September 2011

இன்று ஒருநாள் மட்டும் இந்த உலகம் என் வசப்பட்டால்....

நீலவானத்தின் மேலேறி சென்று,
மின்னலில் கிளையொன்றை வெட்டி,
நட்சத்திரங்களை அதில் கோர்த்து,
நிலவினையும் கூட சேர்த்து..

நீ அணிந்திட, உனக்காக
நட்சத்திரமாலை செய்திடுவேன்!!

மழையின் தூறலை
தரியினில் வைத்து,
வானவில்லின் சாயங்கள்
ஏழையும் குழைத்து,

நீ உடுத்திட, உனக்காக
மழையாடை நெய்திடுவேன்!!

ஆகாய விரிப்பினை
ஒரு பாதி கிழித்து,
தவழ்கின்ற மேகங்களை
அதில் முழுதும் சேமித்து,

நீ உறங்கிட, உனக்காக
வான்மெத்தை செய்திடுவேன்!!

கடலின் அடியில் சென்று,
எரிமலையின் தலையை வெட்டி,
அதில் வழியும் நெருப்பினை மூட்டி,
களைப்பு தீர..

நீ குளித்திட, உனக்காக
கடல்நீரை வெந்நீராக்கிடுவேன்!!

காலை சூரியனின்
மஞ்சள் வெயிலெடுத்து,
உன் கன்னங்களுக்கு
சந்தனம் பூசிடுவேன்!!

மாலை சூரியனின்
சிவந்த வண்ணமெடுத்து,
உன் உதடுகளுக்கு
வர்ணம் பூசிடுவேன்!!

புல்லின் மீதமர்ந்திருக்கும்
பனித்துளிகளுக்குப் பதிலாய்,
உன் வியர்வைத்துளிகளை,
அமரவைத்து அழகுப் பார்ப்பேன்!!

கூவுகின்ற குயில்களைப் பிடித்து,
அவைகளிடம் வேண்டுகோள் விடுத்து,
இன்று முழுவதுமுனக்கு
பிறந்த நாள் பாடல்களை
பாடிட செய்திடுவேன்!

இன்று ஒரு நாள் மட்டும்
இந்த உலகம்,
என் வசப்பட்டால்.....


ஷீ-நிசி

Tuesday, 16 August 2011

சித்தாள்
உச்சி வெயிலு
கால பதம் பார்க்குது
மிச்ச(ம்) இருக்குற
கல்லப் பார்த்தா,
எச்சி வறண்டு
நாக்கும் ஒட்டி போகுது!

கல்ல தலயிலயும்
கனவ மனசிலயும்
தூக்கிட்டு போறேன்...

எனக்கும் வருவான்
ஒருத்தன் ராசாப் போல!
என்ன பார்த்துபான்
அவன் ரோசாப் போல!

சொமதூக்க விடமாட்டான்
ஒருநாளும்! -எனக்கு
இமப்போல காவலிருப்பான்
எந்நாளும்!

வேர்த்து வேலைசெஞ்சி
பசியா வரும் என் ராசாக்கு
சோறு கறி சமைச்சி
ருசியா நான் போடுவேன்!

ஏப்பம் விட்டு என் ஐயா
எழுந்த பின்னே
அந்த எச்சி தட்டில்
சோறுபோட்டு சுவையா
நானும் திம்பேன்!

புள்ளைங்க ரெண்டு
சீக்கிரமா பெத்துபேன்...
அதுங்க கிட்ட நானும்
அ.ஆ.இ.ஈ... கத்துபேன்!

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

இமபோல பார்த்துபேன்
என் ராசா போல
எந்நாளும்!


ஷீ-நிசி

Monday, 8 August 2011

பாரதி காணாத புதுமைப் பெண்
எட்டி நிற்கும்
நிலவு மட்டுமல்ல,
சுட்டெரிக்கும்
சூரியனும் தான் நீ!!

முகமூடிகளை
அணியாதவள்!
முகம் வாடி தலை
குனியாதவள்!

உன் விரல் சிந்தும்
வார்த்தைகளோ
ஞானிகளின் ரகம்!

உன் இதழ் சிந்தும்
புன்னகைகளோ,
ராணிகளின் ரகம்!

வாழ்வின் ஒரு பாதி,
கற்றுக்கொள்ளாமலே
பெற்றுக்கொண்டவள்!

மறுபாதி,
பெற்றுக்கொள்ளாமலே
கற்றுக்கொண்டவள்!

தமிழ் மொழியென்றால்
உன் விழிகளிரண்டும்
பரவசமடையும்!

கலாச்சாரமும், பண்பாடும்
உன் மொழிகளிலின்று
மறு பிரசவமடையும்!

இன்று!
பாரதியிருந்தால்
சொல்லியிருப்பான் -நீதான்
புதுமைப் பெண்னென்று!

அன்று,
சொன்னவளுக்கு
இட்டிருப்பான் பேரை
முதுமைப் பெண்னென்று!


ஷீ-நிசி

Thursday, 4 August 2011

இந்த நட்சத்திரங்கள்எந்த வெள்ளை புறா
நடந்து சென்ற பாத சுவடுகள்
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
போர்த்திக் கொள்ளும்
பொத்தல் நிறைந்த போர்வையா
இந்த நட்சத்திரங்கள்?!

பால் நிலா தோட்டத்தில்
பூத்திருக்கும்
தேன் மல்லிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் சுத்தம்
செய்யப்படுவதற்காய்
தெளிக்கப்பட்ட சோப்பு நுரைகளா
இந்த நட்சத்திரங்கள்?!

மேக தேவதைகளின்
உறக்கத்திற்காய்
வான் மெத்தை மேல்
தூவப்பட்ட வெள்ளிப் பூக்களா
இந்த நட்சத்திரங்கள்?!

நிலாவிற்கு
வர்ணம் பூசினப்போது
சிந்தின துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

விதியினை எழுதும் எழுதுகோலில்
மை உள்ளதா என்று
இறைவன் உதறிப் பார்த்த துளிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

வானம் இரவு நேரங்களில்
கீழே விழுந்து விடாமலிருக்க
குத்தப்பட்ட குண்டூசிகளா
இந்த நட்சத்திரங்கள்?!

நட்சத்திரங்களிடமே கேட்டேன்?!

விடை கிடைக்குமுன்பே
விடை பெற்றுக்கொண்டது;
என் நட்சத்திர கனவு
அலாரத்தின் கதறலால்.....


ஷீ-நிசி

Monday, 1 August 2011

தாய்ப்பாசம்
நெல்வயலில் களையெடுக்கும் தாய். அவளது குழந்தை வயல் ஓரமாக அமைந்த மரத்தின் கிளையில் தூளியிட்டு படுத்துக் கிடக்கிறது. சற்று நேரத்திற்கெல்லாம் பசிவந்து அக்குழந்தை பசியில் அழுகிறது! மகவுக்கு பால் கொடுக்கச் சென்றால் வரப்பில் நிற்கும் பண்ணையார் ஏசுவார். பால் கொடுக்காமல் இருந்தாலோ குழந்தை அழுது அழுது தொண்டை வறண்டு போகும். இப்படி மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் அந்த தாய் இருதலைக் கொள்ளி எறும்பாய் துன்பப்படுகிறாள்! அவள் மனதில் நினைத்திருக்கும் வரிகள் இங்கே கவிதையாக!


மரத்தில தூளி கட்டி,
மவராசன தூங்க வச்சி...

நல்ல வெயிலு பின்னியெடுக்க,
நான் இறங்கினேன்..
நெல்லு வயல்ல களையெடுக்க;

கண்ணு என்னமோ நெல்லு மேல,
கவனம் எல்லாமே பிள்ள மேல!

செத்த நேரந்தான் ஆகிருக்கும்..
பெத்த புள்ள அழுதிட்டிருக்கு!

பரபரன்னு ஏறினேன்,
வயற்பரப்பு மேல...

பசியால அழுது துடிக்குது
பச்ச புள்ள குரலு! -அதுக்கும்
மசியாம என்ன வெரட்டுது
பண்ணையாரு குரலு!

அழாதேடா கண்ணு!
ஆத்தா அடிவயிறு வலிக்குது!

என்ன செய்யறதுன்னு,
புரியாம என் மனசு தவிக்குது!

பண்ணையார எதித்து,
பால்கொடுக்க நான் வந்தா,
இந்த வேளைக்கு பசியாறும்...

அடுத்த வேளைக்கு....
நான் எங்க போவேன்?

அடுத்த வேலைக்கு
நான் எங்க போவேன்?

வேலய முடிச்சி
வெரசா வாரேன்!
என் மக ராசா!

அது வரைக்கும்..
காத்தனுப்பி தூங்க வையி!
என் மர ராசா!


ஷீ-நிசி

Saturday, 30 July 2011

இதயங்களின் சப்தங்கள்
நிசப்தமான இரவு நேரம்...

இரவு?!

பூமிராணிக்கு சூரியசேவகன்
போர்த்தும் போர்வை போலும்!

மரக்கிளையில்
அவ்வபோது மெட்டவிழ்த்தன,
சில பூங்குயில்கள்!

பூங்கிளையில்
அவ்வபோது மொட்டவிழ்த்தன,
சில பூக்கூட்டங்கள்!

சத்தமிட்ட சப்தங்கள் யாவும்
தடைசெய்யபட்டன!!

கதவுகளும், சில ஜன்னல்களும்
சாத்தப்பட்டதில்,

சத்தமிட்ட சப்தங்கள் யாவும்
தடைசெய்யப்பட்டன!!

பளிங்கு நிறத்திலொரு
வெண்மெத்தை!!! - அதே
நிறத்தில் அதின்மேலொரு
பெண் தத்தை!!

அவனும்! அவளும்!

கொஞ்சம் இடைவெளியில்
அமர்ந்திருந்தனர்..
கொஞ்சும் கடைவிழியால்
பேசிக்கொண்டிருந்தனர்..

பாஷைகளின்றி!
ஓசைகளின்றி!

புரிந்துகொள்ளப்பட்டன
ஆசைகள் யாவும்!

இருவரும் நெருங்கியதில்
இடைவெளி வெளியேறியது!
காற்றும் கூட புகமுடியாதபடி
தடை வேலி உருவானது!

கட்டிக்கொண்ட உடல்களால்,
ஒட்டிக்கொண்டன இதயங்கள்!

அருகருகே சந்தித்ததில்
இனம்புரியாத மகிழ்ச்சியில்,
படபடவென்று அடித்தன!
பட்டாம்பூச்சி இதயங்கள்!

அறையின் திசையெங்கும்
ஒலித்தது இசையொலி!

மெல்ல கண்மூடினாள் இளமங்கை!
இதயங்களின் சப்தங்களை ரசித்தபடி!


ஷீ-நிசி

Friday, 29 July 2011

உன்னில் விழுந்தவன்!கர்ப்பத்தின் அறையில்
களிப்போடு தாங்கியவளே!
மாதங்கள் பத்தும்
வலியோடு தூங்கியவளே!

பாரம் இறக்கிவைத்து
அழுகுரல் வந்த....
தூரம் செவிவைத்து
உன் தலைசாய்த்தாய்!

கண் திறக்காமல்,
கதறிக்கொண்டிருந்தேன்!
உன் குருதி பாலானது!
எனக்கது முதல் உணவானது!

எல்லாம் புதிதாய் அணிவித்து,
பள்ளிக்கனுப்பினாய்! -நீ
அணிந்ததை எல்லாம் விற்று,
கல்லூரிக்கும் அனுப்பினாய்!

கண்ணீர் விட்டாய்!
பலமுறை மணவறை
மணாளானாலும்
சிலமுறை கருவறை
மகனாலும்!

ஆனால், என்றுமே
இன்பம் மட்டுமே அளித்தாய்!
உன்னில் விதைத்தவனுக்கும்
உன்னில் விழுந்த எனக்கும்!

அம்மா!

ஒவ்வொரு உயிரும்.....
மண்ணில் மரிக்கும்வரை,
தன்னில் நினைக்கவேண்டும்!

ஷீ-நிசி

Tuesday, 26 July 2011

கருவறை உறவிது
சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
பூத்த உறவல்ல இது!
இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
பூத்த உறவிது!

நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்தவள் நீ!
நான் தமக்கை என்ற பதவியை
எனக்குத் தந்தவள் நீ!

காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!

இப்பொழுதெல்லாம்
மோதல்களில் நீயே
வெற்றிக்கொள்கிறாய்..

நம் ஆயுதங்கள்,
அதிகபட்சம் தலையணைகள்!

காலங்கள்
வினாடிகளை விடவும்
வேகமாய் ஓடுகின்றன!

பால்ய காலங்களை கடந்து -இன்று
பருவ காலத்திலே நாம்!

ஒரே அறையில்
ஒன்றாக பயில்கிறோம் -பின்
நன்றாக துயில்கிறோம்!
எப்போதும் மகிழ்கிறோம்!!

இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!


ஷீ-நிசி

Monday, 18 July 2011

இரும்பிலே ஒரு சேலை - முதல் பரிசு பெற்ற கவிதை


செய்தி : உத்தரபிரதேசம் :மேலும் 3 சிறுமிகள் கற்பழிப்பு

நேற்றிரவு ஒரு கனவு

வெள்ளுடையில்,
அழுதுகொண்டிருந்தாள்;
ஒரு பெண்..

ஏன் அழுகிறாய்?!
என்ன வேண்டும் என்றேன்?

இரும்பிலே,
எனக்கொரு சேலை வேண்டும்!
கிடைக்குமா என்று கேட்டாள்....

நீ யாரென்று கேட்டேன்..

நானா?!! நான்.. நான்..
நான்தான்…..

“பாரதமாதா"

ஷீ-நிசி

ஈகரை தளம் நடத்திய கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றது இக்கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன்.
http://contest4.eegarai.com/p/blog-page_7751.html

Tuesday, 12 July 2011

கலைந்து போன வானவில்

வானவில் எப்பொழுதும்
வளைந்துதானே இருக்கும்!

இங்கென்ன?!
கலைந்து போயிருக்கிறது!!

அவள் முகமும்
தளர்ந்து போயிருக்கிறது!!!

துள்ளியோட விரும்பும்
மானினமே! -உன்னை
துவள வைக்கிறதோ?!
இந்த ஆணினமே!!

ஷீ-நிசி

Friday, 24 June 2011

இது என்ன உறவோ?!

இரத்த சொந்தமுமில்லை!
சொந்த இரத்தமுமில்லை!

இது என்ன உறவோ?!

இதயத்தில் வலிகூடி –அழும்
இமைகளில் வழிந்தோடி -விழும்;
கண்ணீர்துளிகளை,
துடைத்திடும் நேரங்களில்….

உன்னில் அன்னையை உணர்கிறேன்!!

தேவைகளின் இறுக்கத்திலே -ஒரு
தீவைப் போல இருக்கையிலே,
இன்னலென உணர்ந்த கணமே -எனக்கு
மின்னலென உதவின மனமே!

உன்னில் தந்தையை உணர்கிறேன்!!

உனக்கு பிடிக்காதவர்களோடு
நான் பேச நேர்ந்தால்,
உனக்கு பிடித்தவர்களோடு
நான் பேசிக்கொண்டேயிருந்தால்….
உனக்குள் எழும் கோபவேளைகளில்;

உன்னில் காதலை உணர்கிறேன்!!

இது என்ன உறவோ?!
இதன் பெயர்தான் நட்போ!!

Sunday, 13 March 2011

ஓட்டு போட


நம் பிள்ளைகள்
நம்மிடம் கற்றுக் கொள்ளட்டும்,

ஓட்டு போட…..

விரலை மட்டும்தான் நீட்டவேண்டுமென்று!!!

கைகளை அல்ல....


ஷீ-நிசி

Thursday, 3 March 2011

1000....2000....3000....

கைநீட்டி வாங்க முடிவெடுத்தபின்,
ஏன் தேர்தலுக்கு தேர்தல்
காத்திருக்க வேண்டும்??

தெருவுக்குத் தெரு
காத்திருக்கலாமே!!!!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை