Thursday, 23 April 2009

கரையோர மீன்கள்
போய்வருகிறேன்
என்று சொல்லி,
விடைபெற்றனர் நால்வரும்!

புதுமனைவிக்கு
கையசைத்தான் ஒருவன்!

நேற்று தந்தையாக்கிய
குழந்தைக்கு விரலசைத்தான்
மற்றொருவன்!

காதலிக்கு கண்ணசைத்தான்
இன்னொருவன்!

நிச்சயிக்கபட்டவளை
எண்ணி நினைவசைத்தான்
வேறொருவன்!

கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்!

கரையோரத்தில் வாழும்
மீன் கூட்டங்கள்!

சுனாமிக்கும், சூறாவளிக்கும்
தப்பியதில்லை குடிசைகள்!

அடங்கியபின்,
மீண்டும் அங்கேயே
குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!

நிச்சயமில்லாத
பயணம்தான் நாளும்!

நிச்சயமில்லாததாலேயே
பயணங்களும் நீளும்!

ஒரு நாள் பயணமும் உண்டு!
ஒரு வார பயணமும் உண்டு!

அதிர்ஷ்டம் இருந்தால்
மீனிலே சிக்கி
வலையே கிழியும்!

அதிர்ஷ்டம் இறந்தால்
வீணிலே சிக்கி
வலை மட்டுமே கிழியும்!

வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!

கடலிலே பழுதானால்?!

தூரத்தில் மிதக்கும்
கட்டையும் கூட,
காப்பாற்றப்போகும்
படகாய் தோன்றும்!

தண்ணீரும், அரிசியும்
தவணைமுறையில்
உட்கொள்ளவேண்டும்!

கடல்வீதியை,
கிழித்துக்கொண்டு பயணமானது;
நால்வரோடும் -அந்த
வாழ்க்கைப் படகு!

ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா,
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!

படகோ, நடுக்கடலில்
இளைப்பாறிக்கொண்டிருந்தது!

வலைவீசி காத்திருந்தனர்!

வீசின ஒவ்வோரிடத்திலும்
மீன்களைத் தவர
வேறெல்லாம் சிக்கின!

அதோ! அங்கே சென்றால்
மீன்களை அள்ளலாம்
என்றான் ஒருவன்!

அவன் விரல்கள்
”எல்லை”த் தாண்டி காட்டியது!

வேண்டாம் என்றான்
மற்றொருவன்!

வெறுங்கையுடனா
கரைக்கு செல்வது?!

சிக்கினால்,
வெறுங்கை கூட
கரைக்கு செல்லாது!

வாக்குவாதம் முற்றி
எல்லை தாண்டியது..

வாதமும்! படகும்!

படகின் சத்தத்தையும்,
விளக்கையும் அணைத்தனர்!

இருளோடு கலந்து
வலை வீசினர் கடலில்!
நடுக்கம் வாட்டியது
அவர்கள் உடலில்!

தூரத்தில் மின்னொளியில்
ஊர்ந்துவந்தது ஓர் படகு!

சந்தேகமேயில்லை,
கடல் கொள்ளையர்கள்தான்!

கதறினான்,
புது மனைவி கண்டவன்!

கடல்கொள்ளையர்களிடம்
ஒரு கொள்கை உண்டு!

பக்கத்தில் வந்துவிட்டால்
படகை ஓட்டக்கூடாது!

உடன்பட்டால்
உயிர் மட்டும் தப்பும்!
மற்றவைகள் சூறையாடப்படும்!

மீறினால் உயிரும் கூட
சூறையாடப்படும்!

காதலிக்கு கண்ணசைத்தவன்
தான் படகையும் அசைப்பவன்!
(ஒட்டுநர்)

கடல் கொள்ளையர்களின்
படகை கண்டதும்,
இன்ஜினை முடுக்கினான்..
ஏதோவொரு வேகத்தில்!

எட்டும் தூரத்தில்
நெருங்கியது படகு
அவர்களின் பக்கத்தில்!

ஒரு கண்மூடி, ஒரு கண்வழியே
குறிபார்த்தான் கொள்ளையன்!

துப்பாக்கி குண்டு,
தப்பாமல் முடித்தது
தன்கடமையை..
அவன் மார்பில்!

தேக்கிவைத்த காதலெல்லாம்
இரத்தமாய் வழிந்தது
அவன் மார்பின் வழியே!

காதலியின் முகத்தை
நினைவில் நிறுத்தி -தன்
சுவாசத்தை நிறுத்தினான்..

தந்தையானவனும்,
கணவனானவனும
சடுதியில் குதித்தனர்!

கடலின் மடியில்,
படகின் அடியில்
ஒளிந்தனர்!

நிச்சயிக்கபட்டவன்,
நிச்சயிக்கபட்டான்!
இன்னொரு குறிக்கு!

இந்தக் குண்டு அவன்
வயிற்றை நேசித்தது!

குடலையும் குருதியையும்
பெற்றெடுத்து இறந்தான்...

விலைமதிப்புள்ள பல
வலையையும், கயிறையும்
சூறையாடினர்....

சுற்றும் முற்றும் தேடிவிட்டு
அடுத்த உயிரை எடுக்க
படகை எடுத்தனர்...
கடல் எமதர்மர்கள்!

கடலின் மடியில்
விழுந்த இருவர் மட்டும்
கரை சேர்ந்தனர்!

இறந்தவனின் சொந்தங்கள்
அழுது புரண்டன!

மீண்டவனின் சொந்தங்கள்
அழுவதா?! சிரிப்பதா?!
என்று மிரண்டன!

ஊர்த்தலைவர்கள்
கோட்டையில் நின்றனர்!

தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்!

ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Wednesday, 15 April 2009

மின்சார (ரயில்) தேவதைமின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல...
இரு பை நிறைய உடைகளோடு!!

பரிச்சயமான முகமென்று
மூளை எண்ணியது!

பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!

பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...

நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;

நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!

எப்படியோ சமாளித்துவிட்டேன்!!

ஏதேதோ பேசினோம்,
அவ்வப்போது சிரித்தோம்!

பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!

மறு நாள்..

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;

மிகவும் பயத்துடன்!!

என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!

எதிர்முனையில் ஆண்குரல்!

நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்,

ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...

அடுத்து வந்த,
இரு தினங்களும் விடுமுறை!

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!

வாரத்தின் முதல் நாள்!

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை,
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;

கூடவே பதற்றத்துடன்...

மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!

ஆம்! தேவதையின் குரல்!!

பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..

எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!

இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!

நாட்கள் கடந்தன!

வெளியில்
சந்திக்க மட்டும் மறுத்தாள்!

மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!

இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்,
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!

தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!

என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!

எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

--

--

--

தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!

நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Tuesday, 7 April 2009

உடைந்த ஜாடி
பெண்ணில் உண்டானது
அடைந்து கிடக்கிறது!
மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது!

இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!

ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!

இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Wednesday, 1 April 2009

நிலவு களவு போனது

நேற்றிரவு,
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்ல வேண்டுமாம்!

நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!

அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்..

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?

விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை