Sunday, 11 October 2009

சாமிக்கு ஒரு கோவில்

சண்டை போட்டு
கட்டிட்டாங்க,

அவங்க சாமிக்கு ஒரு கோவில்,
இவங்க சாமிக்கு பக்கத்துலயே;

இப்போ சாமிங்க ரெண்டும்
ஒண்ணா நிக்குது!

கோவில் கட்டின ஜனங்க மட்டும்
பிரிஞ்சே நிக்குது!!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

Saturday, 1 August 2009

கடவுளுக்கு ஒரு கேள்வி?!


தாலி கயிறொன்று
அவள் கழுத்தில் ஏறாததால்;
தாம்பு கயிறொன்று,
அவள் கழுத்தில் ஏறியது.

கடிதமொன்று அவளருகில்
படபடத்தது,

அதில்…..

கடவுளுக்கு ஒரு கேள்வி!

“கடைசி இரவை
கொடுத்தாயே இறைவா….
எனக்கு முதல் இரவை கொடுத்தாயா?! ”

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

Saturday, 18 July 2009

அந்தி வானம்...
வானில் ஒரு கடல்சீற்றம்!
அங்குமிங்கும் சிதறியபடி,
எங்குமெங்கும் மேக அலைகள்...

அலைகின்ற ஒவ்வொரு
மேகலையும் சங்கமித்ததில்,
விலையற்ற ஓவியங்கள்,
ஒவ்வொன்றாய் கருவாகின!

உருவான கருயாவும்
கலைந்தபடியே இருந்தன!

கலைந்தாலும்... மேகங்கள்
அலைந்தபடியே இருந்தன!

ஏனிந்த சீற்றம்?!
ஏனிந்த மாற்றம்?!

அந்தரத்திலிருந்த கதிரவன்,
கடல் கன்னியின்,
அந்தப்புரத்தில் வீழ்ந்தானாம்!

மேகலையின் உடலெல்லாம்
கோபலைகளாய் மாறியது!

அந்த வானமானது..
அந்தி வானமானது!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

Thursday, 16 July 2009

கல்கி இதழில் சிறு விமர்சனம்

நண்பர்களே, ஒரு இனிப்பான செய்தி...

இந்த வார கல்கி இதழில் (19-07-2009) அடியேனின் கவிதையை பற்றி சிறு குறிப்பு காணப்பெற்றேன். அடையாளம் கண்டு இதழில் வெளிவர உதவிய உள்ளத்திற்கு நன்றிகளும், இதழில் இடம்பெற்ற என் சக கவிஞர்களுக்கு வாழ்த்துக்களையும் நவில்கிறேன்.

ஷீ-நிசி (http://nisiyas.blogspot.com)


கல்கி இதழின் விமர்சனம்

////வித்தியாசமான பார்வையில் இவரது கவிதை ஆக்கங்கள் நறுக்குத் தெரித்தாற்போல் சிந்தனைச் சொல்லாடல்களாக விளங்குகின்றன. படங்களும் கவிதைகளுமாக இவரது பக்கங்கள் வசீகரிப்பவையாக உள்ளன.//////

கல்கி இதழுக்கு எனது நன்றிகள்!


ஷீ-நிசி

Monday, 6 July 2009

தமிழ் செய்திகள் - உங்கள் அலைபேசியில்

நண்பர்களே!

அரிது அரிது மொபைலில் தமிழ் எழுத்தினை காண்பது அரிது. அதனினும் அரிது அந்த எழுத்துக்கள் ஒன்றின்மீது ஒன்று ஏறாமல் காட்சியளிப்பது!!!!

எதையோ தேடும்போது எதுவோ கிடைக்கும்னு சொல்வாங்க.. அப்படித்தான் இந்த மொபைல் மென்பொருள் ஒன்று எனக்கு இணையத்தில் கிடைத்தது. அடடா என்று போடவைக்கும் ரகம் இந்த மென்பொருள்... இலவசம் இது என்பதுதான் ஹைலைட்....

அவரவர் அலைபேசிக்கு ஏற்றவகையில் டவுண்லோட் செய்ய வழிசெய்திருக்கிறார்கள்.

பதிவுசெய்யனும் அப்படி இப்படின்னு தொந்தரவுலாம் இல்லாம்.. இந்தா வாங்கிக்கோ என்றதுபோல கொடுத்திருக்கிறார்கள்.

இது என்ன சிறப்பம்சம் என்றால் எந்தவித தமிழ் எழுத்துருவும் நம் மொபைலில் தரவிறக்கம் செய்யாமலே தினமலர் செய்திகளை இதில் வாசிக்கமுடிகிறது.

சரி நான் இதைப்பற்றி சொல்றதை விட நீங்க இதைப்பற்றி எனக்கு சொல்லுங்க....


http://www.newshunt.com

என்னுடைய மொபைல் ஸ்கிரீன்ஷாட்ஸ்Saturday, 13 June 2009

காதல் காலம்....
மெல்லிய தூறல்
விழுந்துக்கொண்டிருக்கும்
மழைக் காலம்!
மாலைக் காலம்!!

வானம் வடிகட்டி,
பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது..
சுத்தமான மழைத்துளிகளை!

அலைபேசி அலறியது...

”இதோ வந்துவிட்டேன்”..
என் நிலா செய்தியனுப்பினாள்!

எங்கிருக்கிறாய்? என்று
எண்ணிலா செய்தியனுப்பியபின்!

வழக்கமாக சந்திக்கும் பூங்காதான்!

அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து,
தலைதுவட்டாமலிருந்தன!

சுற்றிக் கொண்டே,
வந்தவனின் கண்கள்
ஓரிடத்தில் நின்றன.

தலைதுவட்டாமலிருந்த
பூக்களில் ஓன்று, பூங்காவிற்குள்
நுழைந்துக்கொண்டிருந்தது!

கைப்பை குடையாய்
மாறியிருந்தது..

அவள் கூந்தலை தொடமுடியாத
மழைத்துளிகளெல்லாம்,
பையோடு யுத்தமிட்டு -அவள்
கைவழியே வழிந்தன!

பூமியில் தேங்கியிருந்த
வான் துளிகளை
அவள் பாதங்கள் தொட்டன,

அக்கணத்தில், அக்கர்வத்தில்
இருபக்கமும் தெறித்துநினறு
அவைகள் அவளை
வரவேற்றன...

ஒவ்வொரு அடியிலும்
தண்ணீர் பூக்கள் தெறித்தன!

அருகே வந்தவள்
ஸாரி..டா என்றாள்!

மரத்தினிலையால்,
மழைத்துளிகள் தொடாத
இடத்தில் அமர்ந்தோம்!

மரங்களுக்கிடையில் சிக்கின
மழைத்துளிகளுக்குள் வாக்குவாதம்!
அவள் மீது விழுந்திட விரும்பி -அதில்

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!

பேசிக்கொண்டேயிருந்ததில்,
வானத்திலும் ஒரு நிலா
வந்துவிட்டதை கவனிக்கவில்லை!

நேரமாகியது என்றாள்...
ஈரமான தலையை
துவட்டிக்கொண்டே!

பூங்காவை விட்டு
வெளியேறினோம்!

சற்றுமுன் தலைதுவட்டிக்
கொண்டிருந்த பூக்களில் பல,
காம்பின் வழியே
அழுதுகொண்டிருந்தது!

காவல்காரன்
வினோதமாய் பார்த்தான்...

பூங்காவின் பூவை
ஏன் எடுத்துச்செல்கிறாய்
என்று பார்ப்பதுபோல்!

என் இருசக்கர வாகனத்தின்
பின்னிருக்கை, என்னிருக்கையை
ஏளனமாய் பார்த்தது..

தோளை தொட்டபடி
ஏறியமர்ந்தாள் வாகனத்தில்...

பூங்காவிற்கு கையசைத்து
விடைபெற்றோம்!

ஒரு மெல்லிய காற்று
உண்டானது!

பூக்களெல்லாம்
எங்களைநோக்கி கையசைத்தன...

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

Friday, 22 May 2009

நடைபாதை மனிதர்கள்பூமிக்குள்ளே இயங்கிடும்
இது ஒரு தனி உலகம்!

இப்படியும் வாழ முடியுமென்று
வாழ்வியல் முறையையே
மாற்றிக் காட்டியவர்கள்!

இன்னமும் வறுமையின்
'மை' யிலேயே நின்றுக் கொண்டிருக்கும்
பூமியின் கடைசி செல்வந்தர்கள்!

உங்களுக்கெல்லாம் இது வீதி!
அவர்களுக்கோ இது வீடு!

சில பருவக்காலங்களில்
மழை பொய்த்துப்போவதும்
இவர்கள் மேலுள்ள
கருணையில்தானோ!?

உறக்கத்தைக் கூட
கிறக்கத்தோடு பார்த்திடும்
சில ஓநாய்கள்!

அவசரமில்லாத உறவுகளும் கூட
அமாவாசையின் புண்ணியத்தினால்!

தவறாமல் காணலாம்
இவைகளிரண்டும்!

ஒன்று
கண்ணீர் அஞ்சலி பலகை!
மற்றொன்று
ரசிகர் மன்ற பலகை!

சாதம் விற்று
சாதம் உண்ணும் -மிகச்
சாதாரண ஜீவன்கள்!

பல கல்யாணங்கள்
காதலில் நடந்தேறிடும -சில
பக்கத்து நடைபாதையினரோடு
மோதலில் நடந்தேறிடும்!

இவர்களின் அதிகபட்ச கனவே
அடுத்த வேளை சாப்பாடுதான்!

வரிஏய்ப்பு, நிலமோசடி
என்றெல்லாம்
பத்திரிக்கையில் அடிபடாதவர்கள்!

அவ்வப்போது லாரி ஏறியதென்று
ப(டு)த்திருக்கையில் அடிபட்டவர்கள்!!

1000 சதுர அடியிலும்
திருப்தியடையாதவனே!

இங்கே கொஞ்சம் பார்!

10 சதுர அடியில்
ஒரு பட்டாளமே இயங்குகிறது!

வாழ்க்கையில் சலிப்புற்றவர்களே!
வாழும் பாடம் இவர்கள்!
வாழக் கற்றுக்கொள்வோம்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Sunday, 10 May 2009

பிஞ்சு மேகம்!
வானுக்கும், பூமிக்குமான
வானுயர்ந்த பாதையில்....

வெள்ளை மேகமொன்று,
பிள்ளை வடிவில் இறங்கியது!
பூமியின் எல்லையில்!

எந்த தேவதைக்கு
பிறந்த தேவதையோ?!

தேவதைகள்,
வானில்தானே இருக்கும்!!

பூமிக்கு இறங்கியதால்,
இந்த பூமியும் வானமாகியது!!
கருப்பு வெள்ளை வர்ணமாகியது!

தேவதை பிரசவித்த..
தேவ பிள்ளையின்
பிம்பத்தை பிரசவித்ததில்..

நீரலைகளெல்லாம்,
தேனலைகளாய் ஆனது!

பிஞ்சு மேகத்தின்
பஞ்சு பாதம் பட்டதும்...

நீரிலிருந்த செவ்விதழ்களெல்லாம்,
ஒவ்வொன்றாய் மேலேறி,
செந்நிறப் பூக்ககளாகின!
மேக குழந்தையின்,
பொன்னிறப் பூக்கரங்களிலே!

வெட்கமென்ன?!
வெள்ளுடை தரித்த,
வெண்பிஞ்சுமேகமே!

கொஞ்சம் நிமிர்ந்து பார்..
உன் பார்வையில்,
பஞ்சாக மாறட்டும் -எங்களின்
நஞ்சான மனங்கள்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Thursday, 23 April 2009

கரையோர மீன்கள்
போய்வருகிறேன்
என்று சொல்லி,
விடைபெற்றனர் நால்வரும்!

புதுமனைவிக்கு
கையசைத்தான் ஒருவன்!

நேற்று தந்தையாக்கிய
குழந்தைக்கு விரலசைத்தான்
மற்றொருவன்!

காதலிக்கு கண்ணசைத்தான்
இன்னொருவன்!

நிச்சயிக்கபட்டவளை
எண்ணி நினைவசைத்தான்
வேறொருவன்!

கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன கடலோர மீன்கள்!

கரையோரத்தில் வாழும்
மீன் கூட்டங்கள்!

சுனாமிக்கும், சூறாவளிக்கும்
தப்பியதில்லை குடிசைகள்!

அடங்கியபின்,
மீண்டும் அங்கேயே
குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!

நிச்சயமில்லாத
பயணம்தான் நாளும்!

நிச்சயமில்லாததாலேயே
பயணங்களும் நீளும்!

ஒரு நாள் பயணமும் உண்டு!
ஒரு வார பயணமும் உண்டு!

அதிர்ஷ்டம் இருந்தால்
மீனிலே சிக்கி
வலையே கிழியும்!

அதிர்ஷ்டம் இறந்தால்
வீணிலே சிக்கி
வலை மட்டுமே கிழியும்!

வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!

கடலிலே பழுதானால்?!

தூரத்தில் மிதக்கும்
கட்டையும் கூட,
காப்பாற்றப்போகும்
படகாய் தோன்றும்!

தண்ணீரும், அரிசியும்
தவணைமுறையில்
உட்கொள்ளவேண்டும்!

கடல்வீதியை,
கிழித்துக்கொண்டு பயணமானது;
நால்வரோடும் -அந்த
வாழ்க்கைப் படகு!

ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா,
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!

படகோ, நடுக்கடலில்
இளைப்பாறிக்கொண்டிருந்தது!

வலைவீசி காத்திருந்தனர்!

வீசின ஒவ்வோரிடத்திலும்
மீன்களைத் தவர
வேறெல்லாம் சிக்கின!

அதோ! அங்கே சென்றால்
மீன்களை அள்ளலாம்
என்றான் ஒருவன்!

அவன் விரல்கள்
”எல்லை”த் தாண்டி காட்டியது!

வேண்டாம் என்றான்
மற்றொருவன்!

வெறுங்கையுடனா
கரைக்கு செல்வது?!

சிக்கினால்,
வெறுங்கை கூட
கரைக்கு செல்லாது!

வாக்குவாதம் முற்றி
எல்லை தாண்டியது..

வாதமும்! படகும்!

படகின் சத்தத்தையும்,
விளக்கையும் அணைத்தனர்!

இருளோடு கலந்து
வலை வீசினர் கடலில்!
நடுக்கம் வாட்டியது
அவர்கள் உடலில்!

தூரத்தில் மின்னொளியில்
ஊர்ந்துவந்தது ஓர் படகு!

சந்தேகமேயில்லை,
கடல் கொள்ளையர்கள்தான்!

கதறினான்,
புது மனைவி கண்டவன்!

கடல்கொள்ளையர்களிடம்
ஒரு கொள்கை உண்டு!

பக்கத்தில் வந்துவிட்டால்
படகை ஓட்டக்கூடாது!

உடன்பட்டால்
உயிர் மட்டும் தப்பும்!
மற்றவைகள் சூறையாடப்படும்!

மீறினால் உயிரும் கூட
சூறையாடப்படும்!

காதலிக்கு கண்ணசைத்தவன்
தான் படகையும் அசைப்பவன்!
(ஒட்டுநர்)

கடல் கொள்ளையர்களின்
படகை கண்டதும்,
இன்ஜினை முடுக்கினான்..
ஏதோவொரு வேகத்தில்!

எட்டும் தூரத்தில்
நெருங்கியது படகு
அவர்களின் பக்கத்தில்!

ஒரு கண்மூடி, ஒரு கண்வழியே
குறிபார்த்தான் கொள்ளையன்!

துப்பாக்கி குண்டு,
தப்பாமல் முடித்தது
தன்கடமையை..
அவன் மார்பில்!

தேக்கிவைத்த காதலெல்லாம்
இரத்தமாய் வழிந்தது
அவன் மார்பின் வழியே!

காதலியின் முகத்தை
நினைவில் நிறுத்தி -தன்
சுவாசத்தை நிறுத்தினான்..

தந்தையானவனும்,
கணவனானவனும
சடுதியில் குதித்தனர்!

கடலின் மடியில்,
படகின் அடியில்
ஒளிந்தனர்!

நிச்சயிக்கபட்டவன்,
நிச்சயிக்கபட்டான்!
இன்னொரு குறிக்கு!

இந்தக் குண்டு அவன்
வயிற்றை நேசித்தது!

குடலையும் குருதியையும்
பெற்றெடுத்து இறந்தான்...

விலைமதிப்புள்ள பல
வலையையும், கயிறையும்
சூறையாடினர்....

சுற்றும் முற்றும் தேடிவிட்டு
அடுத்த உயிரை எடுக்க
படகை எடுத்தனர்...
கடல் எமதர்மர்கள்!

கடலின் மடியில்
விழுந்த இருவர் மட்டும்
கரை சேர்ந்தனர்!

இறந்தவனின் சொந்தங்கள்
அழுது புரண்டன!

மீண்டவனின் சொந்தங்கள்
அழுவதா?! சிரிப்பதா?!
என்று மிரண்டன!

ஊர்த்தலைவர்கள்
கோட்டையில் நின்றனர்!

தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்!

ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Wednesday, 15 April 2009

மின்சார (ரயில்) தேவதைமின்சார இரயிலில்
உட்கார்ந்துக் கொண்டிருந்தது தேவதை!
இறகுகளோடு அல்ல...
இரு பை நிறைய உடைகளோடு!!

பரிச்சயமான முகமென்று
மூளை எண்ணியது!

பேசச் சொல்லி,
மனசு உறுத்தியது!

திட்டிவிட்டால்...
பயம் உறுத்தியது!

பரவாயில்லை,
தேவதைதானே!

பயத்தின் உறுத்தலை விட,
மனதின் உறுத்தல்
அதிக நாள் நீடிக்கும் என்பதால்,
தேவதையிடம் பேசிவிட்டேன்...

நீங்க அந்த ஸ்கூல்லதான படிச்சீங்க!!
அதிர்ஷ்டம்!
ஆமாம் என்றாள்;

நானும் அந்த ஸ்கூல்ல......
துரதிர்ஷ்டம்!
அது பெண்கள் பயிலும் பள்ளி!

எப்படியோ சமாளித்துவிட்டேன்!!

ஏதேதோ பேசினோம்,
அவ்வப்போது சிரித்தோம்!

பிரியும்போது,
கேட்டதனால் கூறினாள்;
அவளது அலுவலக எண்னை!

மறு நாள்..

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை
அழுத்தினேன்;

மிகவும் பயத்துடன்!!

என் மூச்சுக்காற்றின் வேகம்
எனக்கே வியப்பானது!

எதிர்முனையில் ஆண்குரல்!

நான்தான் எடுப்பேன் என்று
அவள் கூறியிருந்ததால்,

ஆண்குரலிடம் பேச
ஆர்வமில்லாமல்
தொடர்பை துண்டித்தேன்...

அடுத்து வந்த,
இரு தினங்களும் விடுமுறை!

அந்த இரண்டு தினங்கள்
என் வாழ்வின் வறண்ட தினங்கள்;

பறிகொடுத்தவனின் பரிதவிப்பு
தொலைத்தவனின் அழுகை,
இவர்களின் உணர்வுதான்
எனக்கும் ஏற்பட்டது!

விடுமுறைகளின் மீதே
கசப்பு உண்டானது!

வாரத்தின் முதல் நாள்!

தேவதையை தொடர்பு
கொள்ளும் எண்களை,
இம்முறை கூடுதல்
பயத்துடன் அழுத்தினேன்;

கூடவே பதற்றத்துடன்...

மீட்டினால்தானே வரும்
வீணையின் ஒலி; -இங்கே
தொலைபேசியில் எண்களை
அழுத்தினாலே வருகிறது!

ஆம்! தேவதையின் குரல்!!

பேசினோம்!
சிரித்தோம்!
பழகினோம்!

உம்! அப்புறம்! என்ற
வார்த்தைகள் மட்டும்
கண்டுபிடிக்கபடாமலிருந்தால்..

எங்கள் உரையாடல்களின்
நீளங்கள் குறைந்து போயிருக்கும்!

இன்றும்,
பல தொலைபேசி காதல்கள்
துளிர்த்துக்கொண்டிருக்காது!!

நாட்கள் கடந்தன!

வெளியில்
சந்திக்க மட்டும் மறுத்தாள்!

மீண்டும் மீண்டும்
முயற்சித்தேன்!
மீண்டும் மீண்டும்
மறுத்தாள்!

மறுக்க ஒரு காலம்
உண்டென்றால் -இணங்க
ஒரு காலம் உண்டல்லவா!

இந்த இயற்கை விதிதான்
இன்றும் எனக்குள்,
நம்பிக்கை விதைகளை
தூவிக்கொண்டிருக்கிறது!

தேவதை இணங்கினாள்!
வெளியில் வர சம்மதித்தாள்!

கூட்டம் அதிகமாக
சேரும் இடத்தை
தேர்வு செய்தோம்!

என் சந்தோஷத்தின் பொழுதுகள்!
அவளை சந்தித்த பொழுதுகள்!

அந்த இடங்கள் எல்லாம்
அன்று புனிதப்பட்டன!
தேவதையின் பாதங்கள்
அங்கே பயணப்பட்டதால்!!

அன்றே என் காதலை
அவளிடம் சொல்ல
முயற்சித்தேன்;

என் பேச்சும், செயலும்
என் காதலை
அவளுக்கு வெளிப்படுத்தின!

சமயமும், காலமும்
வாய்க்காதலால்,
என் காதலை வெளிப்படுத்தவில்லை..

அவள் உறவுகளின் நிகழ்வுகளை
என்னிடம் கூறினாள்!
என் உறவுகளின் நிகழ்வுகளை
அவளிடம் கூறினேன்!

எல்லா நிஜங்களையும்
பரிமாறிக்கொண்டோம்!
காதலைத் தவிர..

என் நிலை தெரிந்தும்
தன் நிலை காட்டாமல்,
தன்னிலை மறைத்தாள்!

ஒரு மெல்லிய மாலைப் பொழுதில்,
காதல் வலி உண்டாகி,
என் காதலை பெற்றெடுத்தேன்!

--

--

--

தான் ஏற்கெனவே,
நிச்சயமானவள் என்றாள்!

துடிக்கின்ற இதயம்
அன்று கொஞ்சம் அழுதது!

அழுகின்ற கண்களோ
அன்று கொஞ்சம் துடித்தது!

உன் உறவுகளைப் பற்றி
பலமுறை கதைத்தாய்?! -இதை
மட்டும் ஏனடி என்னிடம் மறைத்தாய்?!

வலித்த இதயம்
எழுப்பிய கேள்வியை
உதடுகள் வெளியிடவில்லை!

நீயும் நிராகரிப்பில் சுகம் காணும்
சாதா(ரண) ரகப் பெண்தானா?!

இதயத்தை அமைதிபடுத்தினேன்.....

உன்னில் வசித்திட,
அவள் தகுதியானவளல்ல!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Tuesday, 7 April 2009

உடைந்த ஜாடி
பெண்ணில் உண்டானது
அடைந்து கிடக்கிறது!
மண்ணில் உண்டானது
உடைந்து கிடக்கிறது!

இமைகளில் தெரிகிறது,
தூக்கமும், ஏக்கமும்!
உடைகளில் தெரிகிறது,
சூழ்நிலையும், ஏழ்(மை)நிலையும்!

ஆசைகளும், கனவுகளும்
அழகிய ஜாடிபோல்!

உடைந்துவிட்டால்,
உற்றுநோக்காதீர்கள்!

இதோ! உறங்கபோகிறான் அவன்!
வேறொரு கனவுக்காய்!
வேறொரு ஆசைக்காய்!

___________________________________


கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? - ஆம் / இல்லை

கவிதை படித்துமுடித்தீர்கள். இதோ இந்த கணத்தில் உங்கள் மனதில் ஒரு விமர்சகன் வந்தமர்ந்திருப்பான். அவன் என்ன சொல்கிறானோ அதை அப்படியே உங்கள் விமர்சனமாய் பதியுங்கள். இங்கே

Wednesday, 1 April 2009

நிலவு களவு போனது

நேற்றிரவு,
நிலவை யாரோ
களவாடிவிட்டார்களாம்;

இனி அங்கே ஒளி வீசிட
நிலவிற்கு பதிலாய்
நீ செல்ல வேண்டுமாம்!

நட்சத்திரங்களெல்லாம்
இன்று காலைமுதல்
என்னை நச்சரிக்கின்றன;

முடியாது என்று
புறமுதுகு காட்டினேன்;

நட்சத்திரங்களெல்லாம்
கண்ணீர் விட்டன;

முதன் முதலாக அன்று
பூமியிலிருந்து
மழை பெய்திட ஆரம்பித்தது!!

அழுகையில் மனமிளகி
அரைமனதாக ஒப்புக்கொண்டு;
அவைகளிடமே கேட்டேன்..

நீங்கள் பறிகொடுத்த
நிலவில் கறை இருந்திடுமே;
நான் அனுப்பும் நிலவில்
துளி கறையும் காணப்படாதே!

உங்கள் சூரியத்தலைவன்
கண்டுபிடித்தால் -உங்களை
சுட்டெரித்திடுவானே என்று!?

விடை தெரியாமல்
விழிகளெல்லாம் நனைந்தன
கண்ணீரால் நட்சத்திரங்களுக்கு;

வினாவெழுப்பிய நானே
விடையளித்தேன்!

நட்சத்திரங்களெல்லாம்
முகம் பிரகாசிக்க
புன்னகைத்தன!

என்ன தெரியுமா?

நான் அனுப்பும் நிலவிற்கு
கறையாய் -நானே
அவளுடன் ஒட்டிக்கொள்கிறேன் என்று!!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Friday, 27 March 2009

புத்த ஜோதிபச்சைக் கிளியொன்று
மிச்ச சிறகுகளோடு
வெளியில் வந்து..

அடுக்கிவைத்த
கட்டுகளைச் சுற்றி உலாவி,
கலைத்துபோட்ட
சீட்டுகளுக்குள்ளே துழாவி,

ஆறறிவு உயிரொன்றின்
எதிர்காலத்தை,
ஐந்தறிவு உயிரொன்று
தேடிக் கண்டெடுத்தது.

சொன்ன சொல் கேட்டால்,
தின்ன நெல் தருபவனிடம்
கொடுத்துவிட்டு,

மீண்டும் திரும்பியது
கூண்டுக்குள்ளேயே!!

போதிமரத்தின் கீழே,
புத்தனமர்ந்தான்!
ஞானியாகினான்...

மீதி மரத்தின் கீழெல்லாம்
இவனமர்ந்தான்.....
??????

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Thursday, 26 March 2009

பட்டாம்பூச்சி விருது!

22/03/2009 அன்று நண்பர் வேத்தி பட்டாம்பூச்சி விருது அளித்தார்.
அவருக்கு என் நன்றிகள்!

என்னிடம் சேர்ந்த பட்டாம்பூச்சி - பட்டாம்பூச்சிகளாய் பறக்கவேண்டும்..நான் இந்த விருதை மூன்று பேருக்கு அளிக்கவேண்டும். கீழே புகைப்படத்தில் இருக்கும் மூன்று அன்பர்களுக்கும் இந்த விருதை அளிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.அகநாழிகை!
அகநாழிகை என அழைக்கபடும் பொன்.வாசுதேவன். ரசனையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். கதை கவிதைகள் என எல்லா தளங்களிலும் முத்திரை பதிப்பவர். படிப்பவர்களை சலிப்படைய செய்திடாத நடையில் கதையெழுதும் ஆற்றல் கொண்டவர். உதா: "யமுனாவின் மனநோய்" என்ற கதை. இவரிடமிருந்து இன்னும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன். நீங்களும் இவருடைய தளத்தை உலாவுங்கள்.

வாழ்த்துக்கள் வாசுதேவரே!

சுரேஷ்!
சக்கரை என்ற ப்ளாக் தளத்தில் பல்வேறு ரசனையான பதிவுகளை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதி கலக்கிவரும் நண்பர். அனுபவம், அரசியல் நையாண்டி, கவிதை கிறுக்கல்கள் என பல்வேறு பிரிவுகளில் தன் அனுபவங்களை தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் அவ்வபோது இங்கே விஜயம் செய்யுங்கள்!

வாழ்த்துக்கள் சுரேஷ்!
கலை-இராகலை என்ற இவரின் வலைத்தளமே மிக அழகாக, தெளிவாக, கண்டபடி இல்லாமல் ஒரு ஒழுங்காக இருக்கும். வீடு சுத்தமாக இருந்தால்தானே விருந்தினரின் வருகை அதிகம் இருக்கும். வாழ்க்கைக்கு பயனுள்ள பல பதிவுகளை பகிர்ந்துகொள்பவர். இவரின் "தியானம்" பற்றிய பதிவு யாவருக்குமே பயனளிக்ககூடியது. தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகளை படைக்க வாழ்த்துகிறேன். உங்கள் பார்வையும் இத்தளத்தை பார்வையிடட்டும்.

வாழ்த்துக்கள் கலை!

உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை தொட்டால் இந்த பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள். நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்ற மூன்று ப்ளாகர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

விருது பெற்ற தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்!

அன்புடன்
ஷீ-நிசி

Monday, 23 March 2009

அவளைப் பற்றி!1.

வானவில்லில்
கருப்பு நிறம் இல்லையாம்;
கருப்பு நிறத்தில் மட்டுமே
இரண்டு வானவில்லை காண்கிறேன்!

அடியே -உன்
புருவங்களைத்தானடி சொல்கிறேன்!

2.

நாம் தானே
வலை விரிப்போம்
மீன் பிடிக்க;

மீன்கள் ரெண்டும்
வலை விரிக்கின்றன
எனைப் பிடிக்க!

உன் விழிகளைத்தானடி சொல்கிறேன்!3.


வழிந்து விழும் அருவிகள் தானே
தலையை நனைத்திடும்! -இங்கு
தலையிலிருந்துதான் அருவிகளே
விழுகின்றன!

உன் கூந்தலைத்தானடி சொல்கிறேன்!!

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Saturday, 21 March 2009

அப்பா
தத்தி தத்தி நடந்தேன்!
கைப்பிடித்து நடக்கப் பழக்கினாய்!

தத்தி தத்தி பேசினேன்!
வாயசைத்துக் கற்றுக் கொடுத்தாய்!

இயற்கை அழைப்புகளால் நான்
ஈரமாக்கிய ஆடைகளை மாற்றி,
வேறு உடை அணிவித்து
அழகுப் பார்த்தாய்!

அன்று,
நான் குழந்தையாய் இருந்தேன்!

எல்லாம் நீயெனக்கு
செய்தாய் கருத்தாய்!


தத்தி தத்தி நடக்கிறாய்!

தத்தி தத்திப் பேசுகிறாய்!

இயற்கை அழைப்புகளால்
ஈரமாக்கினாய் ஆடைகளை....

இன்று
நீ குழந்தையாய் இருக்கிறாய்!

எல்லாம் உனக்கு யாரோ
செய்கிறார்கள் கடமையாய்!

உன்னால் நான் இன்று
மூன்றடுக்கு மாடியில்;
என்னால் நீ இன்று
முதியோர் இல்லத்தில்...

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Thursday, 19 March 2009

என்னவளோ! அவனவளோ!

நண்பர் ஒருவர் ஒரு கவிதையொன்றை விரும்பி கேட்டார்...

மேற்கோள்:
எனது கல்லூரி நாட்களின் காதலி தற்பொழுது வேறொருவரை மணம் முடித்து நல்ல முறையில் சந்தோஷமாக குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கின்றார், ஒருவேளை என்னை மணம் முடித்திருந்தால்கூட இந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்திருப்பாளோ தெரியவில்லை. அவளது சந்தோஷத்தினை காண எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, இந்த சந்தோஷத்தை என்னால் தர முடியவில்லையே என்ற வருத்தமும் இருக்கிறது. இந்த சந்தோஷ/வருத்தத்தின் வெளிப்பாட்டை எனக்கு ஒரு கவிதையாக தர முடியுமா?


அந்த நண்பருக்காய் இந்த கவிதை
______________________________________________________________ஆயிரமாயிரம் ஆசைகள்
அமிழ்ந்துபோனதடி அடிமனதில்!

நீ இன்னொருவனின் கரம்
பற்றின அந்த நொடிப்பொழுதில்!

விழிகள் கண்ணீரை வடித்தே
வறண்டு போகின!

வருடங்களோ! உன்னை
நினைத்தே உருண்டு ஓடின!

இதோ!!!

என்னெதிரே வருகிறாள்,
மீண்டும் என் காதல் தேவதை...

அவளையே உரித்தபடி
அவள் கரங்களை பிடித்தபடி!
ஒரு குட்டி தேவதை!

அதிர்ஷ்ட தேவதையை
தோளோடு அணைத்தபடி,
அந்த அதிர்ஷ்டசாலி!

அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னகைத்தது!

என் அடிமனதில்,
அமிழ்ந்திருந்த ஆசைகளனைத்தும்

இதோ!
இவனால்!
இங்கே!
இன்று!

உயிர்த்தெழுந்திருக்கிறது!

நெருங்கிவிட்டாள்
அவனவள்! என்னருகே!

முட்டி கொள்ளுமோ?!
எங்களின் நினைவுகள்!

சற்றேனும் என்னால்,
சிறைப்பட்டு விடுமோ?!
அவளின் சந்தோஷங்கள்!

நொடியும் தாமதிக்காமல்
என் பாதங்களை,
திருப்பிக் கொண்டேன்!

அவள் நிழலும் கூட
என் மீது விழாதபடி..

அதோ!
என்னை கடந்து செல்கிறது!

என் காதல்...................

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Tuesday, 17 March 2009

கல்லூரி இறுதி நாள்!

விடைபெறுகின்றன
பட்டாம்பூச்சிகள்!

கற்பித்தவனை
கண்டு ஆசி பெற்றன!
கண்டித்ததையும்
தண்டித்ததையும் மறந்து.....

நெஞ்சிலே,
வலிக்கும் வலிகளோடும்!
கண்களிலே,
துளிர்க்கும் துளிகளோடும்!

உருவங்களுக்கு இடையில்
புருவங்கள் சுருக்கி,
தேடிக்கொண்டிருக்கின்றன -சில
நொறுங்கிய இதயங்கள்!

பழகியதை தேடி பல!
விலகியதை தேடி சில!

கையெழுத்துகளில்,
இனிக்கும் நினைவுகளை
கலந்து எழுதின -எல்லா
மின்மினி பூச்சிகளும்!

பனிப் போரிலிருந்த புறாக்கள்
பலவும் சமாதானமாகின..
இனிப் பாரிலெந்த பகையுமின்றி
உலவுமிந்த சமாதான புறாக்கள்!

நேற்றுவரை
அழகிய நட்பை
சுமந்து அலைந்தோம்!

நாளை முதல்
பழகிய நினைவுகளை
சுமந்து அலைவோம்!

நாம் சுற்றித் திரிந்து
தேன் குடித்த மலர்வனம்
நாளை பறக்க இருக்கும்
பட்டுப்பூச்சிகளுக்காய்..
மணம் வீசும்......

அந்த வனத்தில் வீசிய மணம்
நம் மனதில் வீசும் தினம்...

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Monday, 16 March 2009

மெளனமான நேரம்உன் உதடுகளின் ரேகைளில்
ஜாதகம் பார்த்திட,
என் உதடுகள் பிரியப்படுகின்றன!

உன் காதின் வளைவுகளை
கொஞ்சம் வருடி விட,
என் விரல்கள் பிரியப்படுகின்றன!

உன் கன்னங்களால்....
என் மார்பின் ரோமங்களை!
முத்தமிடு முழுமதியே -நீ
என் இதயத்தின் நிம்மதியே!

இதோ!
உன் இதயம் துடிக்கின்ற சத்தம்
என் இதயத்தில் நீ கேட்கின்றாய்!

எனக்காய் மட்டுமே துடித்திடுமா
என்று என்னை நீ கேட்கின்றாய்!

சீ! என்று

உன் முதுகினை சற்றே
என் கரங்களினிடையில்
சிறையிலிடுகிறேன்...

விந்தை!!
உன்னை சிறையிலிட்டு
உன்னிடமே கைதியானேன்..

உன் கன்னங்கள்
என் இரு உள்ளங்கைகளில்
தஞ்சமடைந்தன!

தலை சாய்த்து
பார்க்கும் என்னை,
தலை உயர்த்தி
பார்க்கிறாய் பெண்ணே!

நம் இரு விழிகளும
பேசிக்கொள்கின்றன!

நம் இரு உதடுகளும்
பார்த்துக்கொள்கின்றன!

நொடியின் கால அளவென்பது
ஒரு சிட்டிகையின் நேரம்!
ஒரு கண்ணிமைக்கும் நேரம்!

இனி
நம் உதடுகள் நெருங்கி
வந்துக்கொண்டிருக்கும்
நேரங்களையும்
சேர்த்துக்கொள்ளலாம்!

இதழ்களுக்கு
இடையிலான இடைவெளி
குறைந்துக்கொண்டேயிருக்கிறது!

இதயத்தில் உண்டான
இதமான வலி
கூடிக்கொண்டேயிருக்கிறது!

சட்டென்ற ஓர் கணத்தில்
இதழ்கள் நான்கும்
இணைந்துக்கொண்டன!

வயதுக்கு வராத கண்களை
இமைகள் நான்கும்
மூடிவிட்டன..

கூந்தல்களினிடையில் விரல்களும்,
விரலிகளினிடையில் கூந்தலும்,
சிக்கிக் கொண்டன!

எதையும் தொலைக்காமலே
எதையோ தேடிக்கொண்டிருந்தன!

ஜாதகம் பார்த்த -என்
உதடுகளிரண்டும் சொன்னது,

உன் உதடுகளுக்கும் ஜாதகம்
தெரிகின்றதாம்....

___________________________________

கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

ஆம்

இல்லை

Friday, 13 March 2009

போர்க்களமா வாழ்க்கை?
போர்க்களமா வாழ்க்கை?
பார்க்கலாமே ஒரு கை!

சோர்ந்து விடாதே!
இதுதானா வாழ்க்கை என்று
கோழைகளின் பட்டியலில்
சேர்ந்து விடாதே!

இல்லையென்பார்,
இருப்பதைக் கொடுப்பாய்;
இன்னமும் என்பார்
இதுதான் முடியும் என்பாய்!

மறுகணமே
கஞ்சப் பிரபு என
புறம் கூற புரண்டு நிற்கும்
பஞ்சப் பிரபுவின் நாக்கு!

கொடுத்ததை
திரும்பக் கேட்டால்
கோமாளி என்பான்;
இரக்கப்பட்டு விட்டுவிட்டாலோ
ஏமாளி என்பான்!

நாம் இழைக்கும்
தவறுகளிலே
கதைப் பேசி
பிழைக்கும் கூட்டங்கள்

இந்த நயவஞ்சக
நாக்கினைக் கண்டு;
கதற வேண்டாம் -உன்மனம்
பதற வேண்டாம்!

வீணாய்
ஒலித்துக்கொண்டிருக்கும்
ஓநாய்களின் ஒப்பாரி சத்தமிது..

தானாய் குறைந்து விடும்;
ஒரு நாள் காணாமலே
கறைந்து விடும்!

கருணையற்ற கூட்டம்
காணும்படி,
கண்ணீரை மட்டும்
சிந்தி விடாதே!

இவர்கள் -உன்
விழி நீரிலே விளையாடும்
விந்தை மனிதர்கள் -உன்
கண்ணீரிலே கவிபாடும்
கந்தை மனிதர்கள்!

வில்லில் பூட்டின அம்புக்கும்,
வீணர்களின் நாவிலே மாட்டின
வார்த்தைகளுக்கும்,
அதிக வித்தியாசமில்லை!!

இரண்டுமே,
காயப்படுத்திவிட தயாராய்....

அம்பின் கூர்மையும்
மழுங்கி விடலாம்;
வம்பளக்கும் அவர்களின்
நாவுகளோ ஒருநாளும்
மழுங்கி விடாது!

புறம் கூறிடும்
வஞ்சக கூட்டத்தின்;
நிறம் மாறிடும் நாட்கள்
வெகு தொலைவில்
அல்ல தோழா!

நன்றி கெட்ட
மனிதனின் நாக்கு;
அப்படி இப்படி
புரளத்தான் செய்யும்!

அவனுக்கும்
ஒரு கூட்டம்;
எப்படி எப்படியோ
திரளத்தான் செய்யும்!

போகட்டும்
அவர்களிடம் இல்லாத,
ஆனால் உன்னிடம் இருக்கும்
ஒரே ஆயுதம் மன்னிப்பு!

இவர்களைப் பற்றி
இனி மனதிலே
சிந்திக்கவும் வேண்டாம்!
மறந்தும் கூட
நிந்திக்கவும் வேண்டாம்!

காலம் கண் போன்றது!
கவனித்துக்கொண்டே இருக்கிறது!!


Wednesday, 11 March 2009

பசித்த வேளை
சாப்பிடு மா...
செல்லம் இல்ல, சாப்பிடு மா..
இப்ப சாப்பிடல...

அதோ பாரு,
அந்த அண்ணாகிட்ட கொடுத்திடுவேன்..

ம்ம்... வேணா…ஆஆ!
ம்ம்ம்ம்ம்... வேணா…ஆஆ!

வாப்பா.. இங்க வாப்பா
இந்தாப்பா...

கொடுத்திடட்டுமா?!....

அய்யோ, அந்த அண்ணா வரான்..
இந்தா ஊட்டிக்க.. ஊட்டிக்க..

ம்ம்.. சமத்து...

இந்தா, இன்னொரு வாய்!!


சாப்பிடு மா...
செல்லம் இல்ல... சாப்பிடு மா..
இப்ப சாப்பிடல.......


Tuesday, 10 March 2009

நாலிதழ்கள்!
நேற்றிரவு,
நீயும் நானும்
முத்தமிட்டு கொண்டோமே....

அவை நாளிதழ்களில் வந்தன;
தெரியுமா?! என்றான்!

அச்சத்தின்
உச்சத்திற்கே சென்றேன்!!

எனைப்பார்த்து,
புன்னகைத்தபடியே
அவன் கூறினான்!!

உன் இதழ்கள் இரண்டு!
என் இதழ்கள் இரண்டு!

பின்னென்ன..
நாலிதழ்கள்தானே!!!

Friday, 6 March 2009

பிள்ளைப்பேறுஓர் உயிர்தரிக்க
உதவாதவளா நான்??...

மணமுடித்த மூன்று மாதங்கள்
கேட்டார்கள் சிரித்தபடி!

அடுத்தமாதம் கேட்டார்கள்
கொஞ்சம் அலட்சியபடி!

தேதிக்குப்பின் பிறந்திடும்
ஒவ்வொரு நாளுமே!
தேர்வெழுதிட்ட நிலைதான்!

அடுக்கிவைத்த சீட்டுக் கட்டுகள்
ஓவ்வொருமுறையும்
சரிந்திட்டால்.....

வேலைக்காரியைவிடவும்
கேவலமாய் ஆனேன்
ஒரு வருடத்தில்!

பலிக்கவில்லை
மாமியாரின் ஆசையும்!
சாமியாரின் பூசையும்!

ஒப்புக்கு அழைத்தார்கள்
என்னையும் சுபகாரியங்களுக்கு!

என்னோடு மணமானவர்களுக்கு
கையில் ஒன்று! இடுப்பில் ஒன்று!

உறவுகள் ஓப்பீடு செய்தன...

கருத்தரிக்க இருக்காமலா
கருத்தரித்தேன் பூமியில்?!

கருப்பை இருக்கவேண்டிய
இடத்தில் இறைவன்
வெறு(ம்)ப்பை வைத்தானா?

மனம் அசைபோட்டது...

பிள்ளையில்லா தாய்
இங்கிருக்கிறேன்!

தாயில்லா பிள்ளை
எங்குமிருக்கின்றன!

பெத்தெடுத்து தாயாகலாம்!
தத்தெடுத்தும் தாயாகலாம்!

இதோ நானும் தாயாகிவிட்டேன்!

Thursday, 26 February 2009

விந்தை
கிழிக்கப் பட்ட காகிதங்கள்
கையிலே சுமையாய்;

உதட்டின் விளிம்பின் வரையிலும்
வந்துவிட்ட உமிழ் நீர்;

அவசரகதியில்
இயற்கையின் அழைப்பு;

இருந்தும்,
அவன் எதையுமே இறைக்கவில்லை
சாலையோரத்தில்..

காரணம்!

அவன் நின்றுக் கொண்டிருக்கும்
தேசம் இந்தியா இல்லையே!!!

Tuesday, 24 February 2009

சில காதல் தூறல்கள்!உன் பெயரை
உச்சரிக்கும்போதெல்லாம்,
எச்சரிக்கிறது என் மனது!

விரைவில்...
சர்க்கரை நோய் வரப்போகிறதென்று!!

*

பூவுலகில் மனிதரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
நிலவோடு ஒப்பிடுகிறார்கள்...

என் தேவதையே....

வானுலகில் தேவரெல்லோரும்
தங்கள் காதலிகளை,
உன்னோடுதான் ஒப்பிடுகிறார்கள்!!

*

நான் உன்னை அதிகமாய்
நேசிப்பதில்லையென்று; – நீ
என்னிடத்தில் கோபம் கொள்கிறாய்....

உனக்கு தெரியவில்லையடி!!

நீ கோபப்படும் நேரங்களில்தான்
நான் உன்னை மிக அதிகமாய்,
நேசிக்கிறேனென்று!!!

Thursday, 19 February 2009

தமிழ் "நேற்று இன்று நாளை"

நண்பர்களே!

கடந்த 10-08-2008 அன்று V.G.P -ல் உலக தமிழ் மக்கள் அரங்கம் என்ற ஆர்கூட் கம்யூனிட்டி நடத்தின முதல் ஆண்டு விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரு. சீமான், மற்றும் கவிஞர்.நெல்லை ஜெயந்தா அவர்களின் முன்னிலையில் நடந்த கருத்தரங்கம் மற்றும் கவியரங்கத்தில்,

"தமிழ் நேற்று இன்று நாளை" என்ற தலைப்பில் 7 கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். அடியேனும் அதில் கலந்துகொண்டு கவிதை படைத்தேன். இதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.தமிழ் "நேற்று இன்று நாளை"


நேற்று பெய்த மழையில்,
மலர்ந்த சின்னஞ்சிறு செடியுமல்ல....
படர்ந்து செல்ல வழியில்லாமல்,
உலர்ந்து போன கொடியுமல்ல....

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
பூத்த அன்னைத் தமிழ்!
இந்த சங்கத்தமிழ்! அது தங்கத்தமிழ்!
எங்கள் செந்தமிழ்!!!

அன்று 6-ஆம் நூற்றாண்டின்...
கல்வெட்டிலே வலம் வந்தவள்,
இன்று 21-ஆம் நூற்றாண்டின்..
இண்டர்நெட்டிலும் வலம் வரவும் தெரிந்தவள்!

அன்று ஓலைச்சுவடிகளிலே
வலம் வந்தவள்,
இன்று மேலை நாட்டினர் கண்டெடுத்த
அலைபேசிகளிலும் வலம் வரத் தெரிந்தவள்!

எங்கள் தமிழ் ஒருவகையில்
தண்ணீர் போன்றது!

கிடைக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப
தன்னை பொருத்திக்கொள்ளும்
திறமையுள்ளதால்,

எங்கள் தமிழ் ஒருவகையில்
தண்ணீர்போன்றதுதான்....

தண்ணீருக்கு சிறப்பு
நிறமில்லாமலிருப்பது!

எம் தமிழுக்கு சிறப்பு
சிரமமில்லாமலிருப்பது!

அழிக்க நினைப்பவர்களே,
தமிழ் அழியுமென நினைப்பவர்களே...

வளைத்தவுடன் ஒடிந்துவிட -நீங்கள்
நினைத்தவுடன் அழித்துவிட -தமிழ்
உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில்
பூத்த பூச்செடியல்ல....

அது பூமியின் அடுக்குகளிலெல்லாம்,
வேர்விட்டு படர்ந்திருக்கும் ஆலமரம்...
மிகவும் ஆழமான மரம்!!

காக்க நினைப்பவர்களே!
தமிழை காத்திட துடிப்பவர்களே....

வேற்று மொழிக்கு கரிப்பூசி,
தேற்றிக்கொள்ளும் நிலையில்,
தமிழ் இல்லை!

வானம் போல படர்ந்திருக்கும் தமிழை
ஊனம் போல சித்தரிக்காதீர்கள்.....

உங்கள் சந்ததியையும் பார்த்தது...
உங்கள் மூதாதையரின் சந்ததியையும் பார்த்தது....

நாளை சந்திரனிலும் ஒரு சந்ததி வாழும்...

மேலிருந்து ஒரு குழந்தையின்
மெல்லிய குரல் ஒலிக்கும்....

"அம்மா" என்று

எங்கள் தமிழுக்கு என்றும் அழிவில்லை...
அதற்கு நேற்று இன்று நாளை என்று
காலங்களுமில்லை...


வாழ்க தமிழ்!

*

Tuesday, 17 February 2009

வீதியில் ஒரு சேதி!அத்தை..... சாப்பிடவாங்க,
நேரமாச்சு!!

பாட்டி.. பாட்டி..
இன்னொரு கதை சொல்லு,

அம்மா... இந்தாம்மா
கைசெலவுக்கு வச்சுக்க இத,

பாதசாரிகளே!!

வேண்டாம்.....

எழுப்பாதீர்கள் அவளை!
கலைக்காதீர்கள் அவள் கனவை!

*